திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது முருங்கை சீசன் தொடங்கியுள்ளது. மேலும், போதுமான அளவு மழையும் பெய்துள்ளது. இதனால் முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக அதிகரித்துள்ளது.
முருங்கைக்காய்களை விவசாயிகள் பறித்து, மூட்டை மூட்டையாகச் சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், சந்தையில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, முறுங்கைக்காய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.5 -க்கு விற்றுவந்த நிலையில், தற்போது ரூ.4 மற்றும் ரூ.3-க்கு விற்பனையாகிறது. இதனால் விளைச்சல் அதிகரித்தும், உரிய விலை கிடைக்காததால் முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசிய போது, கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால், முருங்கைக்காய் விளைச்சல் குறைந்து போனது. ஆனால், அதே நேரத்தில் விலை அதிகரித்தது. தற்போது விளைச்சல் அதிகரித்தும், விலை கிடைக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து முருங்கை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே முருங்கை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.