பிரேசிலில் புயலினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான புயல் தாக்கியது. இந்த புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில், கரையோரப் பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள், மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்தால் நகரின் பல்வேறு பகுதிகள் மூழ்கியது. மேலும், அர்ஜென்டினா மற்றும் உருகுவே எல்லையில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நாட்டின் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்தக் கடுமையான புயலால் நகரின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உடல் நசுங்கிப் பலியாகியுள்ள நிலையில், 224 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரேசில் நாட்டின் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் புயல் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.