நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மணல் குவாரியிலும் 2-வது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆறு செல்லும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரசு குவாரி செயல்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகள், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இதன் மூலம், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாகவும், அரசு நிர்ணயித்த ஆழத்தைவிட, கூடுதல் ஆழம் மணல் எடுத்ததாக, மணல் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மணல் குவாரியில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், இன்றும் சோதனை தொடர்கிறது. இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் சேமிப்புக் கிடங்கில் உள்ள அலுவலகத்தில் 2 -வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது, கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டதா?, எவ்வளவு மணல் கிடங்கில் உள்ளது? எவ்வளவு மணல் ஆன்லைன் மூலம் விற்பனை உள்ளிட்ட விவரங்கள் சேகரித்து வருகின்றனர்.
மணல் குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே, மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலர்களில் சோதனை தொடர்ந்து வரும் நிலையில், அரசு மணல் குவாரியிலும் 2-வது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு அமைச்சர், மற்றும் டெல்டா மாவட்டம் தொடர்புடைய ஒரு அமைச்சர், திமுக மாவட்டச் செயலாளர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர், முக்கிய கட்சி நிர்வாகிகள் சிலர், மற்றும் கனிம வளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.