காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக மின்சாரம் கிடைக்கும் எனத் தெரிவித்து விட்டு, குறைந்த அளவு மின்சாரம் வழங்கினால், ஒரு யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்கப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மத்திய அரசு மின்சாரம் வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக மின் தேவையை மத்திய அரசுக்குச் சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
மேலும், தமிழக அரசின் மின் நிலையங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சூரியசக்தி மின்நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. ஆனாலும், தமிழக மின் வாரியம் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது.
மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தான், தற்போது தமிழகம் முழுவதும் அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும், அதைப் பூர்த்தி செய்யத் தேவையான மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்ற பணிகள் செய்கிறது. இதனைச் சரி செய்ய, காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்க, தனியார் மின் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன.
இந்த நிலையில், அடுத்த, 24 மணி நேரத்திற்கு ஒவ்வொரு, 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முன்கூட்டியே தெரிவித்த அளவை விட மின்சாரம் வழங்குவதில், 15 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், 1 யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்க, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, வரைவு அறிக்கையும் வெளியிட்டு, அக்டோபர் 10 -ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக மின் வாரியத்தின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்கும் தனியார் மின் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.