பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகம், நர்மதாபுரத்தில் ‘மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம், ரத்லாமில் பெரிய தொழிற்பூங்கா ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு நாளைப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். காலை 11.15 மணியளவில் மத்தியப் பிரதேசத்தின் பினா செல்லும் பிரதமர், அங்கு ‘பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகம்’ மற்றும் மாநிலம் முழுவதும் பத்து புதிய தொழில்துறை திட்டங்கள் உட்பட ரூ .50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிற்பகல் 3:15 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் நகருக்கு செல்லும் அவர், அங்கு முக்கியமான ரயில்வே துறை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, சத்தீஸ்கரின் ஒன்பது மாவட்டங்களில் ‘அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடங்களுக்கு’ பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார், மேலும் ஒரு லட்சம் அரிவாள் செல் நோய்தடுப்பு ஆலோசனை அட்டைகளையும் வழங்குகிறார்.
மத்தியப் பிரதேசத்தில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சுமார் ரூ.49,000 கோடி செலவில் உருவாக்கப்படும் இந்த அதிநவீன சுத்திகரிப்பு ஆலை, ஜவுளி, பேக்கேஜிங், மருந்து போன்ற பல்வேறு துறைகளுக்கு முக்கிய அங்கமான எத்திலீன் மற்றும் புரோபிலீன் ஆகியவற்றை ஆண்டுக்கு சுமார் 1200 கே.டி.பி.ஏ (கிலோ-டன்) உற்பத்தி செய்யும்.
இந்நிகழ்ச்சியின் போது, நர்மதாபுரம் மாவட்டத்தில் ‘மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்’ என்ற 10 திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்தூரில் இரண்டு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், ரத்லாமில் ஒரு பெரிய தொழில் பூங்கா ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
சத்தீஸ்கரில் பிரதமர்
ராய்கரில் நடைபெறும் பொதுத் திட்டத்தில் சுமார் ரூ.6,350 கோடி மதிப்பிலான முக்கியமான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார். சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3 வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3 வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியின் போது, சத்தீஸ்கரின் ஒன்பது மாவட்டங்களில் 50 படுக்கைகள் கொண்ட ‘அவசரகால சிகிச்சைப்பிரிவு கட்டடங்களுக்கு’ பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் – ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் துர்க், கொண்டகான், ராஜ்நந்த்கான், கரியாபந்த், ஜஷ்பூர், சூரஜ்பூர், சுர்குஜா, பஸ்தர் மற்றும் ராய்கர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.210 கோடிக்கும் அதிகமான செலவில் ஒன்பது அவசர கால சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள் கட்டப்படவுள்ளது.
அரிவாள்செல் ரத்த சோகை நோயால், குறிப்பாக பழங்குடி மக்களிடையே ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், பரிசோதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் அரிவாள்செல் ரத்த சோகை நோய் தடுப்பு ஆலோசனை அட்டைகளையும் பிரதமர் வழங்குகிறார். மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் ஜூலை 2023-ல் பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ் அரிவாள் செல் தடுப்பு ஆலோசனை அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.