நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோ நாட்டுக்கு, நிதியுதவி மற்றும் பொருளுதவி அளிக்க முன்வந்திருக்கும் இந்தியாவுக்கு, அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு 11.11 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தில் மாரகேஷ் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் இதுவரை 2,800-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் நடந்த மறுநாள், இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது. இம்மாநாட்டு தொடங்குவதற்கு முன்பாகப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த சவாலான காலக்கட்டத்தில் மொராக்கோவுக்கு உலகளாவிய சமூகத்தின் அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. மேலும், மொராக்கோ நாட்டுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தகுதி வாய்ந்த அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டு, தேவைகளை மதிப்பீடு செய்து வருகின்றனர். உயிர்களைக் காப்பாற்றுவதும், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் சாலைகளைச் சீரமைப்பதும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதுபோன்ற இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் திறன் மொராக்கோவுக்கு உள்ளது. இருப்பினும், சகோதர மற்றும் நட்பு நாடுகளின் உதவி எப்போது, எங்கே தேவைப்படும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா போன்ற பல சகோதர மற்றும் நட்பு நாடுகள் மொராக்கோவுக்கு தங்களது உதவியை வழங்கத் தயாராக உள்ளன” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவின் உதவிக்கு மொராக்கோ தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, இந்தியாவுக்கான மொராக்கோவின் தூதர் முகமது மாலிகி கூறுகையில், “கடந்த 8-ம் தேதி எமது தாயகத்தைத் தாக்கிய பேரழிவுகரமான பூகம்பத்தைத் தொடர்ந்து, மொராக்கோவுக்கு தனது உதவியை வழங்க இந்தியா கருணையுடன் முன்மொழிந்தது. இந்த சைகை மிகவும் பாராட்டப்பட்டது. இது 2 நட்பு நாடுகளுக்கு இடையே மகிழ்ச்சியுடன் இருக்கும் நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. இந்த இயற்கை பேரிடர் நாட்டை தாக்கிய முதல் மணி நேரத்திலிருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து காட்டப்படும் ஒற்றுமையின் வெளிப்பாட்டை மொராக்கோ உண்மையிலேயே பாராட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.