தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, இடைநிலை ஆசிரியர் பணிக்குப் மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்த நிலையில், அதில் 72 பேருக்கு மட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 60 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. ஆனால், உறுதிமொழி கொடுத்தபடி, அரசுப் பணி வழங்கவில்லை.
இது தொடர்பாகத் தமிழக அரசிடமிருந்து முறையான தகவல் இல்லை. இந்த கோரிக்கை வலியுறுத்தி நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டம் நடத்தும் போது, எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள் விரைவில் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளிக்கின்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால்தான், தற்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என குற்றம் சாட்டுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்குத் தமிழக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாகத் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.