ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலுள்ள நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அதோடு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், 21-வது மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் உயிரிழந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தன்னை வழிநடுத்துபவரை பாதுகாக்கும் வகையில், தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கிக் கொண்டு, தனது உயிரை மாய்த்துக் கொண்டது. தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
எனினும், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமான சண்டை தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு நேர சீதோஷ்ண நிலை காரணமாக, தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2-வது தீவிரவாதியும் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த மிகப் பெரிய ஆயுதக் குவியல், பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.