என் மண் என் மக்கள் யாத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர். சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீ நாராயணன் திருப்பதி, பாஜக தேசிய ஊடகத்துறை செயலாளர் ஸ்ரீ கே.கே. சர்மா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது கூறியதாவது, பாஜகவின் என் மண், என் மக்கள் யாத்திரையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே, ஆளும் திமுக தலைவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
என் மண், என் மக்கள் யாத்திரை மீது பொறாமை கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன், தமிழக மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடன், ஆளும் கட்சியைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் காங்கிரஸ் தலைவர்களின் ஒப்புதலுடன் கதையை உருவாக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தேசிய அளவில் நரேந்திர மோடிக்கும், தமிழக பாஜகவுக்கும் அதிகரித்து வரும் மக்களின் ஆதரவைத் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.
சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, ஆ.ராஜா உள்ளிட்ட திமுக தலைவர்கள் சமீபத்தில் கூறிய கருத்துகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், சனாதன தர்மம் என்பது நித்தியம், வாழ்வியல் முறை. கோடிக்கணக்கான மக்களைக் காயப்படுத்த திமுகவிற்குத் தகுதியில்லை.
திமுக சமூகத்தைச் சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்த நினைக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது.
காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்த, சுதாகர் ரெட்டியும், நாராயணனும், காங்கிரஸ் திமுகவின் அறிக்கைகளைக் கண்டிக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சி தோல்வியடைந்ததாகத் தெரிவித்தார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறும்போது, அண்ணாமலை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறார். இதற்குத் தமிழக மக்களின் அமோக வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, ஆளும் திமுக மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது. நாட்டுக்கு எதிராக, நாட்டு நலனுக்கு எதிராக பேச முயற்சிக்கின்றனர். அதனால் தான் இப்படிச் செய்கிறார்கள் என்று கூறினார்.
“மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதைத்தான் நாங்கள் தமிழகத்தில் உணர்கிறோம். கடந்த 2.5 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் பெரிய ஊழலைப் பார்த்தோம். இந்த யாத்திரை, திமுகவின் ஊழல் மற்றும் மக்கள் விரோத அரசு என்பதை மக்களுக்கு விளக்குகிறது என்று தெரிவித்தார்.