ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், வரும் 5 மாநிலத் தேர்தல் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் வியூகங்களை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம், டெல்லியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில்தான், ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக பா.ஜ.க. மத்திய தேர்தல்க் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையானது. பிரதமர் மோடி மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள் மீது கருத்தொற்றுமை ஏற்பட்டது பிரதமர் மோடியின் திறமையான தலைமைப் பண்புக்கு ஒரு அடையாளம். இதை உலகமே பேசுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளின் பல்வேறு அம்சங்களை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டுகள். பிரதமரின் மக்கள் பங்கேற்பு அணுகுமுறை ஜி 20 திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் நமது சமூகத்தின் பரந்த பிரிவுகளை ஈடுபடுத்தியது.
60 நகரங்களில் நடைபெற்ற 200-க்கும் அதிகமான கூட்டங்கள், ஜி20 நிகழ்வுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தடம் பதித்தன. இதன் விளைவாக, இந்தியா ஜி20 தலைவர் பதவி உண்மையிலேயே மக்களை மையமாகக் கொண்டதாகவும் ஒரு தேசிய முயற்சியாகவும் உருவெடுத்தது. ஜி20 உச்சி மாநாட்டின் விளைவுகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், வரவிருக்கும் தசாப்தங்களில் உலகளாவிய ஒழுங்கை மறுவடிவமைக்க பங்களிக்கும். குறிப்பாக, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதிலும், சர்வதேச நிதி நிறுவனங்களை சீர்திருத்துவதிலும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை நிறுவுவதிலும், பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை ஊக்குவிப்பதிலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட ஒப்பந்தம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றின் முடிவும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றங்களாகும். ‘உலகளாவிய தெற்கின் குரலாக’ உச்சி மாநாட்டை நடத்தியது இந்தியாவின் தலைமைப் பதவியின் ஒரு தனித்துவ அம்சமாகும். இந்தியாவின் முன்முயற்சியால் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், டெல்லி உச்சி மாநாடு இந்தியாவின் சமகால தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நமது மரபு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. இதை ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் வெகுவாகப் பாராட்டினர்.
உலகில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய ஜி20 தலைமைக்கு ஒரு வலுவான திசையை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அது அங்கீகரித்தது. சர்வதேசப் பொருளாதாரத்தின் ஆற்றல், வளர்ச்சிக்கு அதிக வளங்கள் கிடைப்பது, சுற்றுலா விரிவாக்கம், உலகளாவிய பணியிட வாய்ப்புகள், சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வு மூலம் வலுவான உணவுப் பாதுகாப்பு, உயிரி எரிபொருட்கள் மீது ஆழமான அர்ப்பணிப்பு ஆகியவை ஜி 20 உச்சி மாநாட்டின் மூலம் முழு நாட்டிற்கும் பயனளிக்கும் முக்கிய விளைவுகளில் அடங்கும். ஆகவே, ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியில் ஈடுபட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.