உலகளவில் புத்திசாலித்தனம், கடின உழைப்பு ஆகியவற்றில் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள். உலகளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிநாட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், Zscaler நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய் சௌத்ரி குறித்துப் பார்ப்போம்,
1958-ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் சௌத்ரி பிறந்தார். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கணினிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், தொழில்துறைப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதுகலை முடித்தார்.
இதன் பின்னர், AirDefense, CipherTrust, CoreHarbor, Zscaler உள்ளிட்ட வெற்றிகரமான நிறுவனங்களை நிறுவிய ஜெய் சௌத்ரி ஒரு சிறந்த தொழில்முனைவோர் ஆவார். ஐடி பாதுகாப்பு துறையில் அவரது பணி அவரைப் பல நிறுவனங்களுக்கு நம்பகமான ஆலோசகராக மாற்றியுள்ளது.
2008-ஆம் ஆண்டு Zscaler நிறுவப்பட்டது. இதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் சௌத்ரி ஆவார்.
2018-ஆம் ஆண்டு வடக்கு கலிபோர்னியாவில் EY தொழில்முனைவோர் விருது விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பணக்காரர்களின் பட்டியலில் 45-வது இடத்தைச் சௌத்ரி பிடித்தார். இந்தப் பட்டியலில் இடம் பிடித்த 7 இந்திய-அமெரிக்கர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.