பீகார் மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் 30 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் பாக்மதி ஆறு ஓடுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த ஆற்றைக் கடந்துதான் வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டும். அதேபோல, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் 30 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றது.
இந்த படகு, ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கி திடீரென கவிழ்ந்தது. இதில், படகில் சென்ற பள்ளிக் குழந்தைகள் 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தில் இருந்து பொதுமக்களும், உள்ளூர் காவல்துறையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதி 10 குழந்தைகளைக் காணவில்லை.
இதையடுத்து, காணாமல் போன 10 குழந்தைகளையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேசமயம், மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.