இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானை திட்டத்தின் மூலம் இந்திய வன உயிரினங்கள் அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் கடந்த இரு ஆண்டுகளாக யானை வழித்தடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவில் யானை வழித்தடங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 150 யானை வழித்தடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே பரவிக் காணப்படும் நான்கு யானை வாழ்விடப் பிராந்தியங்களில் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் 52 வழித்தடங்களும், வடகிழக்குப் பிராந்தியத்தில் 48 வழித்தடங்களும், தெற்குப் பிராந்தியத்தில் 32 வழித்தடங்களும், வடக்குப் பிராந்தியத்தில்18 யானை வழித்தடங்களும் உள்ளன.
இவற்றில், 126 வழித்தடங்கள் மாநில எல்லைக்குள்ளும், 12 வழித்தடங்கள் இரு மாநிலங்களுக்கு இடையையும் அமைந்துள்ளன. மேலும், 6 யானை வழித்தடங்கள் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே அமைந்துள்ளன.
மகாராஷ்டிரத்தின் விதா்பா பிராந்தியம், தெற்கு மகாராஷ்டிரம், ஒடிசாவிலிருந்து மத்தியப் பிரதேசம் மற்றும் வடக்கு ஆந்திரம் என தங்களுக்குரிய எல்லைகளை யானைகள் விரிவுபடுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்கள் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக அவற்றின் வாழ்விடச் சூழலை மதிப்பீடு செய்வதோடு, தரவுகளின் அடிப்படையில் யானை வழித்தடங்களை அடையாளப்படுத்துவதும் முக்கியமானது.
யானைகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் வடகிழக்கு மாநிலங்களில், அவற்றின் இடப்பெயா்வும் குறைந்த அளவில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் இரு வாழ்விடப் பகுதிகளை இணைக்கும் யானை வழித்தடங்கள், அவைப் புலம்பெயர்வதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தித் தருகின்றன. புலம்பெயர்வு தடைப்படுவதால் யானைகள் தனிமைப்படுத்தப்படுவதோடு, ஒத்த மரபணு விலங்கினங்களுக்கு இடையேயான இனப்பெருக்கம் அவற்றை அழிவு நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இதனால், யானைகளைப் பாதுகாப்பதில் இந்த வழித்தடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.