நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் வருத்தப்படுகிறார்கள்.நமது அரசியலமைப்பை களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். இதன் காரணமாக, தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன என்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், ராகுல் காந்தியை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
தேசியத் தலைநகர் டெல்லியில், இந்திய உலக விவகார கவுன்சிலின் மேம்படுத்தப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துப் பேசிய துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், “நாட்டின் முன்னேற்றம் அபரிமிதமானது, கற்பனைக்கு எட்டாதது. ஆனால், அபாயகரமான, தீய, தேச விரோத குணம் கொண்ட கதைகள் அவ்வப்போது வெளிநாடுகளில் உலா வருகின்றன. சிலர் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள். நீங்கள் ஐரோப்பாவுக்குச் செல்லலாம் அல்லது இங்கிலாந்திலேயே தங்கி இருக்கலாம்.
எனினும், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பகுதியினர் வசிக்கும் இந்த நாட்டின் எழுச்சி அபரிமிதமானது மற்றும் கற்பனை செய்ய முடியாதது. இது முதலீடு மற்றும் வாய்ப்புக்கான உலகளாவிய இடமாக உருவெடுத்துள்ளது. நமது அரசியலமைப்புகளை களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும், சீரழிக்கவும் மட்டுமே வடிவமைக்கப்பட்ட இத்தகைய உத்தியை, நடுநிலையாக்குவதில் உங்கள் பங்கு போதுமானது” என்று கூறியிருக்கிறார்.