தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
கடந்த 1996 -ம் ஆண்டு முதல் 2001 -ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002 -ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பின்னர், வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணை முடிவில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில், நான் பார்த்ததிலேயே மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்று கூறி இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தாமாக முன்வந்து எடுத்தார்.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும், அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டு உள்ளது என்றும், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.இதற்கிடையே அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து இன்று அறிவிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சற்று முன்னர், அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.இதனால், இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதாக அறிவித்துள்ளது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.