சிங்கப்பூர் அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் இன்று பதவியேற்றார். இதையடுத்து, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சிங்கப்பூர் அதிபராக இருந்த ஹலிமா யாக்கூப்பின் பதவிகாலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியைச் சேர்ந்த இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில், 70.4 சதவிகித வாக்குகள் பெற்று தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்றார்.
இந்த நிலையில், சிங்கப்பூர் அதிபராகப் பதவி வகித்து வந்த ஹலிமா யாக்கூப்பின் பதவி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழரான தர்மன் பதவியேற்றதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் 9-வது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர், சிங்கப்பூர் அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய அமைச்சகப் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சிங்கப்பூர் துணை பிரதமர், நிதியமைச்சர் போன்ற முக்கியப் பதவிகளையும் வகித்திருக்கிறார்.