திருவண்ணாமலையில் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என விஹெச்பி குற்றம் சாட்டியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், கோட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஏழுமலை, உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை, அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மக்கள், வெளியூர் பக்தர்கள் என தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பௌர்ணமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பல லட்சம் பேர் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வருகை தரும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், பக்தர்களுக்ளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை முறையாக செய்து தர வேண்டும். ஆனால், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
எனவே, பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும்.
மேலும், இறந்த யானைக்கு ரூ.49 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். இந்த பணத்தில், பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யலாம்.
மேலும், மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. இது, பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு, ஏற்கனவே, திருக்கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.