இந்திய அரசாங்கம் கோதுமையின் விலையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், விற்பனை அங்காடிகள் ஆகியவை 2,000 டன்களுக்கு அதிகமாகக் கோதுமை கையிருப்பு வைக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, சிலர் தேவைக்கு அதிகமாகக் கோதுமை இருப்பை வைத்துக் கொண்டு நாட்டில் செயற்கையாகக் கோதுமை தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர்.
கடந்த சில நாட்களாகக் கோதுமையின் விலை உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கோதுமையின் இருப்பு வரையறைகளை ஆய்வு செய்தோம். இதனைத் தொடர்ந்து, பெரும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், விற்பனை அங்காடிகளுக்கான கோதுமை இருப்பு வரம்பு 2,000 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உணவு பதப்படுத்துவோர் மற்றும் சிறிய சில்லறை விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்புகளில் மாற்றம் இல்லை.
மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கோதுமை விலை சீரான நிலைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது, சில்லறை விற்பனையில் கோதுமை விலை சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூபாய் 30 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. நாட்டில் போதுமான அளவு கோதுமை இருப்பு உள்ளது என்று தெரிவித்தார்.