ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்குச் செப்டம்பர் 14 -ம் தேதி காலை 8 மணிக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது.
அதில், பயணம் செய்த பயணிகள் சிலர் கடத்தல் பொருட்களைக் கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனால், உஷாரான அதிகாரிகள், விமானத்தில் வந்த 186 பயணிகளிடம் தனித்தனியாக விசாரணை மற்றும் தீவிர சோதனை நடத்தினர்.
இதில், 113 பயணிகள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
13 கிலோ தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட், தங்கக் கம்பி உள்ளிட்டவைகளும், சூட்கேஸ் மூலம் 120 ஐ – போன்களும், 84 ஆண்ட்ராய்டு போன்களும், ஆக மொத்தம் 204 போன்கள் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.
அதேபோல, வெளிநாட்டு லேப்டாப்கள், குங்குமப்பூக்கள் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.14 கோடி ஆகும்.
இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் மீதும் சுங்க சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கைது செய்யப்படவில்லை.
காரணம், கடத்தலில் ஈடுபடும் நபர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடத்தலில் ஈடுபட்டால் மட்டுமே அவரை சுங்க சட்டப்படி கைது செய்ய முடியும். அதற்குக் குறைவான தொகையில் கடத்தினால், கைது செய்ய முடியாது. வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனால், அவர்கள் 113 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் விடுதலை செய்தனர்.