ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ.க. வெற்றிபெற்றால் ராம ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு, இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வருகை தந்தார்.
பின்னர், பில்வாரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அனுராக் தாக்கூர், “ராகுல் காந்தி மற்றும் ராபர்ட் வத்ரா இருவரையும் திருப்திபடுத்துவதிலேயே அசோக் கெலாட் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். வினாத்தாள் வெளியாவது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். மேலும், ராஜஸ்தானில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்.
சனாதன தர்மத்தை எதிர்கட்சிகள் அழிக்க நினைக்கின்றன. இந்துக்களை அவமதித்து அரசியல் சட்டத்தை நசுக்க நினைக்கிறார்கள். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தினமும் கூறி வருகின்றனர். தற்போது பத்திரிக்கையாளர்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எதிர்கட்சிகள் பயத்தினால் எங்கள் மீது புகார் கூறி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான், வருவாயைப் பெருக்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்.