ஐதராபாத் விடுதலை நாள் அசைக்க முடியாத தேசபக்திக்கும், கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஐதராபாத் மக்கள் நடத்திய இடைவிடாத போராட்டத்திற்கும் ஒரு சான்று என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
இன்று ஐதராபாத் விடுதலை நாளாகும். இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஐதராபாத் மக்கள் அனைவருக்கும் “ஐதராபாத் விடுதலை தின வாழ்த்துக்கள்”. இந்த நாள் ஐதராபாத் மக்களின் அசைக்க முடியாத தேசபக்திக்கும், கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஐதராபாத் மக்கள் நடத்திய இடைவிடாத போராட்டத்திற்கும் ஒரு சான்றாகும் . ஐதராபாத் விடுதலைப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எனது மனமார்ந்த அஞ்சலிகள்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐதராபாத்தில் நடந்த ‘முக்தி திவாஸ்’ கொண்டாட்டங்கள் எனப்படும் விடுதலை தினத்திலும் அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில், தேசியக் கொடியேற்றி வைத்த அமித்ஷா, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஐதராபாத் நிஜாமின் ராணுவம் மற்றும் ரஜாக்கர்களுக்கு (நிஜாமின் ஆட்சியின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள்) எதிராக போரிட்ட துணிச்சலான வீரர்களுக்கு அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
ஐதராபாத் சமஸ்தானம் 1948 செப்டம்பர் மாதம் 17-ம் தேதி இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. இந்த நாள் ‘முக்தி திவாஸ்’ என்று நினைவுகூரப்படுகிறது.