டெல்லியில் துவாரகாவிலிருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் சேவையைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அதே மெட்ரோ இரயிலில் பயணம் செய்தார். அப்போது, பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பயணிகள், பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினர்.
இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி துவாரகாவில் பி.எம். விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், துவாரகாவில் “யஷோபூமி” என்று அழைக்கப்படும், இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி.) கட்டம் 1-ஐ பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.
இதற்கிடையே, துவாரகா செக்டார் 21-லிருந்து புதிய மெட்ரோ நிலையமான ‘யஷோபூமி துவாரகா செக்டர் 25’ வரையிலான டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையின் விரிவாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதாவது, டெல்லி மெட்ரோவின் 2 கி.மீ. நீளமுள்ள ‘யஷோபூமி லைன்’ துவாரகா செக்டார் 21 மற்றும் இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரை இணைக்கும் மெட்ரோ இரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.
இப்பிரிவைச் சேர்ப்பதன் மூலம், புது டெல்லியில் இருந்து யஷோபூமி துவாரகா செக்டார் 25 வரையிலான விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனின் மொத்த நீளம் 24.9 கி.மீட்டராக உயரும் என்று டெல்லி மெட்ரோ இரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், இன்று முதல் டெல்லி மெட்ரோ விமான நிலைய விரைவுப் பாதையில் மெட்ரோ ரயில்களின் இயக்க வேகத்தை மணிக்கு 90 கி.மீட்டரிலிருந்து 120 கி.மீட்டராக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விழா நிறைவடைந்ததும், டெல்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, பயணிகளுடன் உரையாடினார். அப்போது, பயணிகள் பலரும் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தனர்.