ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் 1990 வரை தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. 1990 ஜனவரி மாதம் 19-ம் தேதி ஒரே நாள் இரவில் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்த இந்து பண்டிட் சமூகத்தினர் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதோடு, மாநிலத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். இதன் பிறகு, அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் தப்பியோடினர்.
இவ்வாறு தப்பியோடிய 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 13 தீவிரவாதிகளின் மீதான பிரகடன நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.
இதுகுறித்து கிஷ்த்வார் மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் காவல்துறை உத்தரவின்படி, கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைமறைவாக இருக்கும் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) பிரிவு 82-ன் கீழ் பிரகடன நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது.
கிஷ்த்வார் காவல்துறை சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. ஆகவே, தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் இத்தீவிரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, அத்தீவிரவாதிகளை சட்டத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும அவசியமாகும். ஆகவே, மேற்கண்ட தீவிரவாதிகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.