கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் முதல் செயல்படும் புதிய தலைமை அர்ச்சகர் தேர்வு கோவிலில் நடந்தது. தற்போதைய மேல்சாந்தி சிவகரன் நம்பூதிரி, கோவில் அருகே உள்ள நமஸ்கார மண்டபத்தில் சீட்டு குலுக்கி போட்டு புதிய மேல் சாந்தியை தேர்வு செய்தார்.
அதன்படி பாலக்காடு அருகே உள்ள தெக்கே வாவனூரைச் சேர்ந்த கிரண் ஆனந்த் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். தலைமை அர்ச்சகர் பதவிக்கு 42 பேர் விண்ணப்பித்தனர், அதில் 39 பேர் கோவில் தந்திரியுடன் நேர்காணலுக்குப் பிறகு நீக்கப்பட்டு கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 1-ந்தேதி கிரண் ஆனந்த் பதவியேற்கிறார்.
இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்று டாக்டர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவர் , மேலும் வேதங்களில் புலமை பெற்றவர். 34 வயதான கிரண் ஆனந்த் ரஷ்யா , துபாய் ஆகிய நாடுகளில் பணியாற்றி வந்தார். மேலும் இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் நவீன காலகட்டத்தின் முதல் அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய கிரண் ஆனந்த் , ” என் புரிதலின்ப்படி நம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்கள், எண்ணங்கள் போன்றவற்றை எந்த வகையிலும் மற்றவர்களை புண்படுத்தாத வைகையில் இருந்தால் அதை செய்யவேண்டும். நான் பூஜை செய்யும்போது, அந்த மனநிலையில் மனதளவில் உயர்த்தப்படுகிறேன், என்னால் அதில் முழுமையாக மூழ்கிவிட முடியும்”, என்று தெரிவித்தார்.