50 சதவீத பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த சதவீதம் மேலும் உயரக்கூடும் என்றும் மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இந்த அறிவிப்பை ஜெக்தீப் தன்கர் வெளியிட்டிருக்கிறார். 8 பேர் கொண்ட இக்குழுவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்த காந்தா கர்தம், சுமித்ரா பால்மிக், சந்திரபிரபா என்ற கீதா மற்றும் பிஜு ஜனதா தளத்தின் மம்தா மோகந்தா ஆகியோரும், ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் பிரசாத் சிங், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நரேன் தாஸ் குப்தா, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியைச் சேர்ந்த வி.விஜயசாய் ரெட்டி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாந்தனு சென் ஆகியோரும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், செப்டம்பர் 13-ம் தேதி துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “துணைத் தலைவர்களில் 50 சதவிகிதம் பெண்கள் இருப்பதால் உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இக்குழுவில் இடம்பெறும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும்” என்று தெரிவித்தார். மாநிலங்களவையில் தலைவர் அல்லது துணைத் தலைவர் இல்லாத நேரத்தில், இந்த துணைத் தலைவர்கள் குழு அவைக்கு தலைமை தாங்கி நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.