இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாகவும், வினை தீர்க்கும் தெய்வமாக விளங்கும் விநாயகர், பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று விநாயகப் பெருமானை வழிபட்டு செல்கின்றனர். தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்துக்கும் மேலான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்த கேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சென்னையில், புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் குவிந்துள்ளன. வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மலை உச்சியில் உள்ள விநாயகருக்கு இன்று 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை கீழ்கட்டளையில் விநாயகர் சிலையுடன் ‘சந்திரயான் 3’ மாதிரியை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர். மேலும் சென்னை தி நகரில் 208 மைசூர் பாக்கில் செய்த விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னை மணலியில் 5000 பிஸ்கட்பாக்கெட்டில் 18 அடி உயரத்தில் தேசிய கொடி நிறத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பத்தாயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் 14 அடி உயரத்தில் தேங்காய் உள்ளே விநாயகர் இருப்பதுப் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.