சுரங்க ஊழல், நிலம் மற்றும் பண மோசடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை, ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்கத்துறை அமைச்சர் பொறுப்பையும் தன் வசம் வைத்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு தனக்குத் தானே சுரங்க ஒப்பந்தத்தை ஒதுக்கிக் கொண்டார். மேலும், இதன் மூலம் நிலம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த 6 மாதங்களில் 4 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒரு முறை மட்டுமே ஆஜரான ஹேமந்த் சோரன், அதன் பிறகு ஆஜராகவில்லை. மேலும், அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 23-ம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மனை திரும்பப் பெறக்கோரி, தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், எதிர்கட்சிகளை பழிவாங்கும் கருவியாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வலுவான “இண்டி” கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதால், அமலாக்கத்துறையின் வேகம் அதிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு, ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.