ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் கடந்த 1908 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 -ம் தேதி பிறந்தவர் கே.பி.சுந்தராம்பாள். தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல்துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சகோதரர்கள் ஆதரவால் வளர்ந்தார்.
முதன்முதலில் கரூரில் நடைபெற்ற வேலுநாயர் – ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினரின் நாடகத்தில் நடித்தார். அதுவும், நல்ல தங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் என்ற ஆண் வேடத்தில் நடித்து அசத்தினார்.
கே.பி.சுந்தராம்பாளின் வெண்கலக்குரலில், பசிக்குதே வயிறு பசிக்குதே என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி, அவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. நாடகத்துறையில் வலம் வந்த கிட்டப்பா என்பவரை கரம் பிடித்தார்.
அடுத்து, திரைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்தார் கே.பி.சுந்தராம்பாள். பூம்புகார், மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, உயிர் மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டே பாடினார். இதற்காக, இசைப்பேரறிஞர் என்ற விருதையும் பெற்றார்.
காமராசர் ஆட்சியில் தமிழக மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார். இப்படிப் பல் திசைகளில் கொடி கட்டிப் பறந்த கே.பி. சுந்தராம்பாள், 1980 -ம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் தேதி இந்த உலகைவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் இந்த பூமியைவிட்டு மறையவில்லை என்பதே காலம் உணர்த்தும் நிஜம்.