தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியினர், சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து வைத்திருக்கும் கட் அவுட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, தலைவர்களை வரவேற்று பல்வேறு இடங்களில் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
அந்த வகையில், சோனியா காந்தியை அம்மன் வேடத்தில் சித்தரித்து பல்வேறு இடங்களில் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததோடு, போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இந்த கட் அவுட், பேனர் மற்றும் போஸ்டர்களில், சோனியா காந்தி அம்மன் வேடத்தில் நகைகள் மற்றும் தலையில் கிரீடம் அணிந்தபடி காட்சியளிக்கிறார். மேலும், அவரது வலது கையில் இருந்து தெலங்கானா தோன்றுவதுபோல வரைபடமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு, சோனியா காந்தியை தெலங்கானா மாநிலத்தின் அன்னை என்று கொட்டை எழுத்தில் எழுதியுள்ளனர்.
இது தெலங்கானா மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும், தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி, சோனியா காந்தியை ‘தெலங்கானாவின் தாய்’ என்பதுபோல் சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயல் என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கிஷன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாரதம் முழுவதும் சக்தியின் பெண் வடிவமும், தாய் தேவியின் பல்வேறு வெளிப்பாடுகளும் சனாதன தர்மத்தில் வழிபடப்படுகின்றன. ஆனால், ஊழல் காங்கிரஸ் தலைவரை தெலங்கானாவின் அன்னையாக சித்தரித்து ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, பாரத் மாதா கி ஜெய் என்பது கட்சி ஒழுக்கத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒரு காலத்தில் கூறினார்கள். தற்போது சோனியா காந்தியை பாரத மாதாவிற்கு இணையாக சமன் செய்வது போல அம்மன் வேடத்தில் சித்தரித்துள்ளனர். இது முற்றிலும் வெட்கக்கேடானது என்று பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.