பெரம்பலூர் மாவட்டம், வ.களத்தூரில் நள்ளிரவில் காவல்துறையின் மனித உரிமை மீறல் நடைபெற்று உள்ளதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம் வ.களத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் (17.09.23) அன்று இந்துக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்குள் விநாயகர் திருமேனியை வைத்து கிராம பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
இதற்கு முறையாக ஆர்டிஓ (RDO) அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அனுமதி உண்டு, இல்லை என எழுத்துப்பூர்வமாகத் தகவல் ஆர்டிஓ (RDO) தரப்பில் தெரிவிக்கவில்லை.
மக்கள் வழிபாடு நடத்தும் போது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், விநாயகர் திருமேனியை அகற்றச் சொன்னார்கள். பொது மக்களோ கோவிலுக்குள்தான் வைத்திருக்கிறோம், ஏன் எங்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா?5 என விநாயகர் திருமேனியை அகற்ற மறுத்துள்ளனர்.
பிறகு நள்ளிரவில் காவல்துறை குவிக்கப்பட்டு அங்கிருந்த பெண்களின் சேலையை உருவியும், அடித்தும் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.
இதில் வயதான ஒபு பெண்ணை தள்ளிவிட்டதில் அவருக்கு முகத்தில் இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி கூடச் செய்யாமல் கைது செய்துள்ளனர். பிறகு விடுவித்தனர்.
அங்கிருந்த இளைஞர்களை அடித்து தரதரவென இழுத்துச்சென்று காவல்துறையின் வாகனத்தில் அவர்களின் தலையை இடித்துக் காயப்படுத்தி கைது செய்தனர்.
நள்ளிரவில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பொதுமக்களை விநாயகர் வைத்து வழிபட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக காவல்துறை மிகவும் கொடூரமான முறையில் அராஜகப்போக்குடன் செயல்பட்டு உள்ளனர்.
அங்குப் பெண்களின் செல்போன்களை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் உடலளவிலும், மனதளவிலும் மனித உரிமைகளை காவல்துறை மீறியுள்ளது.
கைது செய்த பெண்களை காவல்துறை வண்டியில் ஏற்றி பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை காலால் உதைத்துத் துன்புறுத்தியிருக்கிறார் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி. காவல்துறையின் இந்த அராஜகத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
காவல்துறை உங்கள் நண்பன் எனக் கூறிக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும், இப்பிரச்சனையைக் கையாள தெரியாமல் அராஜகப்போக்கு உடன் செயல்பட்ட மங்களமேடு டிஎஸ்பி (DSP) சீராளன் மற்றும் பெரம்பலூர் டிஎஸ்பி (DSP) பழனிசாமி, காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி, வ.களத்தூர் உதவி ஆய்வாளர் பார்த்திபன் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.