இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு இங்கிலாந்து கவுன்டித் தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. புஜாரா எந்த தவறும் செய்யாத நிலையில், அவரது அணி வீரர்கள் செய்த தவறுக்கு அவருக்கும் சேர்த்து கேப்டன் என்ற முறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பல்வேறு மாநில கவுன்டி அணிகள் பங்கேற்று வருகின்றன. அந்த அணிகள் ஒரு போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த வகையில் இந்திய வீரர்களான புஜாரா, ஜெயதேவ் உனட்கட், சாஹல் உள்ளிட்டோர் பல்வேறு கவுன்டி அணிகளில் இடம் பெற்று ஆடி வருகின்றனர். முன்னணி கவுன்டி அணிகளில் ஒன்றான சசக்ஸ் அணியில் புஜாரா, ஜெயதேவ் உனட்கட் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
புஜாரா மூத்த டெஸ்ட் அணி வீரர் என்பதால் சசக்ஸ் அணி அவரை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்து இருக்கிறது. அவர் அணி விளையாடிக்கொண்டிருக்கும் போது சுழற் பந்துவீச்சாளர் ஜாக் கார்சன் எதிரணி பேட்ஸ்மேன் பென் காக்ஸ் ரன் எடுக்க ஓடி வந்த போது அவரது காலை தட்டி விட்டார்.
இதை நடுவர்கள் கவனித்து விட்டனர். ஜாக் அதை வேண்டுமென்றே செய்தார் என்பது குறித்து நடுவர் சசக்ஸ் அணி வீரர்களிடம் விவரித்த போது டாம் ஹெய்னஸ் மற்றும் அரி கார்வேலஸ் வாதம் செய்ததால் அவர்கள் மூவருக்கும் பெனால்ட்டி விதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் சசக்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், அந்த அணி தவறுக்கான தண்டனையாக புள்ளிகளை இழந்துள்ளது.
இந்த சீசனில் சசக்ஸ் அணி நான்கு தவறுகளை செய்து பெனால்டி பெற்று இருக்கும் நிலையில், விதிப்படி அந்த அணிக்கு இந்த சீசனில் 12 புள்ளிகளை குறைத்து இருக்கிறது கவுன்டி கிரிக்கெட் நிர்வாகம். மேலும், ஒரே சீசனில் ஒரு அணி நான்கு முறை பெனால்ட்டி பெற்றால் அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த வீரர்களுக்கு கேப்டனாக இருந்த ஒரே குற்றத்துக்காக புஜாராவுக்கும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.