சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991 – 1996 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தவர் இந்திர குமாரி. இவரது நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், வெங்கட கிருஷ்ணன்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.73 லட்சத்து 78,000 சொத்து சேர்த்ததாக வெங்கட கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி இவர்கள் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அரசுத் தரப்பில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இவர்கள் 2 பேரும் 700 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி, விடுதலையை ரத்து செய்தது.
இன்று தண்டனை குறித்து அறிவிக்க உள்ளதால், குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் இருவரும் ஆஜராகினர்.
இதனையடுத்து, வெங்கட கிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் சரணடைய அக்டோபர் 25 -ம் தேதி வரை அவகாசமும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி தற்போது, திமுகவில் கலை இலக்கிய அணியின் மாநிலத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.