மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி, காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியாகும் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். மசோதாவின் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரிலே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்றிருக்கிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “மசோதா கொண்டுவரப் போவதை எதிர்பார்க்கிறோம். இது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகக் கோரி வருகிறது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியாகும் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். மசோதாவின் விவரங்களுக்காக காத்திருக்கிறோம். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டியிருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.