நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, நடப்பு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமானாலும், அடுத்து வரும் ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் அல்லது மக்களவை தேர்தலில் நடைமுறைக்கு வராது. தற்போதைய சூழ்நிலையில், 2029-ல்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறு பக்கங்கள் உள்ள, 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கான நேரடி தேர்தல்களில், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்
அதே நேரத்தில் மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைகளுக்கு இது பொருந்தாது.
இந்த இட ஒதுக்கீட்டில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மூன்றில் ஒரு பங்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும்.
கடந்த, 2010-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்த, ஆங்கிலோ — இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு, தற்போதைய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது.
மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், ஒவ்வொரு தொகுதி மறுவரையின்போதும், சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும்
மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அதன்பின், மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும்.
கடந்த 2002-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 82வது பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை, 2026-க்குப் பின் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இதன்படி பார்த்தால், 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே, இடஒதுக்கீடு அமலுக்கு வர வேண்டும்.
ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 2027ல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்.
அதன்பின், தொகுதி மறுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2029ல் இருந்து, மகளிர் இடஒதுக்கீடு, நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.