நிலவில் தடம் பதித்தும், ஜி-20 மாநாட்டினைத் தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம் தான் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி நிர்வாகிகளிடம் ஆதங்கத்துடன் கூறினார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத்தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி இலண்டனில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முஸ்லீம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வேண்டி வரும் அக்டோபர் 21-ஆம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி வியூகம் குறித்து லண்டனிலிருந்தபடி காணொலி வாயிலாகத் தனது கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது, அவர் பேசியது, பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக வீழ்ச்சி நிலையில் சென்று கொண்டிருக்கிறது. நிலவில் தடம் பதித்தும், ஜி-20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது.
நாம் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா செய்துள்ள சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை? இதற்கு காரணம் நம் நாட்டின் முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் நீதிபதிகள் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.