முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு எனப் போற்றப்படும் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலில் வரும் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் அருள்மிகு பழனி முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள மூலவர், போகர் என்ற சித்தரால் நவபாஷானத்தால் செய்யப்பட்டது. இந்த திருக்கோவிலுக்கு ஆவினன்குடி, தென்பொதிகை என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
இந்த திருக்கோவிலுக்குத் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவிலுக்குள் செல் போன் எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்தோடு திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு சென்றது சர்ச்சையானது.
இதனையடுத்து, இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, வரும் 1-ம் தேதி முதல் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல திருக்கோவில் ஆணையர் தடை விதித்துள்ளார். மேலும், கேமரா உள்ளிட்ட எலக்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.