விழுப்புரம் அடுத்த வளவனூரில் சாலைகளைச் சீரமைக்க வேண்டி, விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வணிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த வளவனூரில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், சாலைகளில் நடந்து செல்ல முடியாமலும், இரண்டு சக்கர வானத்தில் செல்ல முடியாமலும் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் அடுத்த வளவனூர் கடை வீதியில் அனைத்து வணிகர்களும் தங்கள் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக,புழுதி பறந்து வருவதாகவும், இதனால் வியாபாரம் செய்ய முடியவில்லை எனவும், உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி அனைத்து வணிகர்களும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர். இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மறியல் போராட்டம் காரணமாக, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.