பிரபல இயக்குநர் பாலா பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கிய மர்ம நபர்கள், அதன் மூலம் நடிகைகள் சிலருக்கு ஆபாச தகவல் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலா, இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளாராக இருந்தவர். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, கடந்த 2008 -ம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான, தேசிய விருது பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் பாலா பெயரில் மர்ம நபர்கள் சிலர், போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, அதில், புதிய படம் துவங்க உள்ளதாகவும், அதில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் கவர்ச்சியான புகைப்படத்தை அனுப்பிவைக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, திரைப்பட இயக்குநர் பாலா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது பெயரில் டிவிட்டர் பக்கம் மட்டுமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கம் இல்லை.
ஆனால், எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை சில மர்ம நபர்கள் உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் பிரபல நடிகைகளுக்குத் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர்.
எனவே, தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.