இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, நேபாளத்திலும் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் நேபாளத்தில் 1900-ம் ஆண்டுகளில் 100 ஆகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை, தற்போது 4014-க்கும் அதிகமாக உள்ளது. உலக காண்டாமிருக தினத்திற்கு முன்னதாக சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை வெளியிட்டுள்ள “காண்டாமிருகத்தின் நிலை” ( state of the Rhino ) என்னும் அறிக்கையில், வனவிலங்கு பாதுகாப்பும், வனவிலங்கின் வாழ்விடத்தின் விரிவாக்கமும்தான் காண்டாமிருகங்கள் அதிகரிப்புக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.
2011-ம் ஆண்டு முதல் உலக காண்டாமிருக தினம் செப்டம்பர் 22 அன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு கொம்பு காண்டாமிருகம் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பட்டியலில் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலின் கீழ் உள்ளது. இந்தியாவில் காண்டாமிருகங்கள் அசாம் , மேற்கு வங்கம் மற்றும் பீகார் பகுதிகளில் காணப்படுகின்றன.
கடந்த காலங்களில் அசாமில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடுவது பரவலாக இருந்தது அதை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த ஆண்டு அசாம் அரசாங்கம் வட-மத்திய அசாமில் உள்ள ஒராங் தேசிய பூங்காவிற்கு சுமார் 200 சதுர கி.மீ பரப்பளவை அதிகப்படுத்தியது. மேலும் ஒராங் தேசியப் பூங்கா இப்போது புர்ஹாசபோரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அசாமில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 27 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டது அதை தொடர்ந்து போடப்பட்ட பாதுகாப்பிற்கு பிறகு 2022 ஆம் ஒரு காண்டாமிருகம் கூட வேட்டையாடப்படவில்லை இந்நிலையில் இந்த ஆண்டு காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மனாஸ் தேசியப் பூங்காவில் 2 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காண்டாமிருக கொம்புகளில் மருத்துவ பொருட்களோ இல்லை வேற எந்த பொருட்களோ செய்யக்கூடாது என்று அசாம் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட காண்டாமிருக கொம்புகளை அரசாங்கம் எரித்துவிட்டது.
இதுமட்டுமின்றி பிற நாடுகளில் வெள்ளை காண்டாமிருங்கங்களை வேட்டையாடுவது அதிகரித்து வருவதால் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்துக் குறைந்து வருகிறது என்று IRF தெரிவித்துள்ளது.
உலகின் ஐந்து காண்டாமிருக இனங்கள் உள்ளது. அதில் கருப்பு காண்டாமிருகங்கள் மற்றும் பெரிய ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் , எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் வெள்ளை காண்டாமிருகங்கள் மற்றும் சுமத்ரான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜாவான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அறியப்பவில்லை என்று அறிக்கை கூறியுள்ளது.