இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) வெளியிட்டிருக்கிறது.
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நஜர், மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரியையும் வெளியேற்றியது. இதற்கு பதலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டின் உயர் தூதரக அதிகாரியை மத்திய அரசு வெறியேற்றியது. இதனால், இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், கனடா நாட்டுடன் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதிகள் 43 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், மேற்கண்ட 43 பேரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை கையில் எடுத்திருக்கும் என்.ஐ.ஏ., அந்த 43 நபர்களுக்கும் சொந்தமான சொத்துக்கள், வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பகிருமாறு மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது தவிர, 43 பேரின் வணிகக் கூட்டாளிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் சேகரிப்பு முகவர்களின் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு, லாரன்ஸ் பிஷ்னோய், ஜஸ்தீப் சிங், கலா ஜாதேரி என்கிற சந்தீப், வீரேந்திர பிரதாப் என்கிற கலா ராணா மற்றும் ஜோகிந்தர் சிங் ஆகியோரின் படங்களையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
மேலும், மேற்கண்ட 5 பேரும் என்.ஐ.ஏ. வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், இவர்களின் பெயரிலோ அல்லது இவர்களது கூட்டாளிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரிலோ சொத்துக்கள், வணிகம் பற்றிய தகவல் இருந்தால், கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கவும் என்று கூறி, +91 7290009373 என்கிற செல்போன் எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த கும்பல்களில் பெரும்பாலோர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் என்.ஐ.ஏ. நிறுவனம் தெரிவித்திருக்கிறது.