மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களின் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும் என்றார்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்ததற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
பின்னர், இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இது இந்தியாவின் நாடாளுமன்றப் பயணத்தின் பொன்னான தருணம். இந்த சபையின் அனைத்து உறுப்பினர்களும், இந்த பொன்னான தருணத்திற்கு தகுதியானவர்கள். மேலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றி கடைசி மைல் கல்லைக் கடக்கும்போது, நாட்டிலுள்ள பெண்களின் முகத்தில் மாற்றம் மற்றும் புதிய நம்பிக்கை தோன்றும். இது கற்பனை செய்ய முடியாத சக்தியாக வெளிப்படும். நாடு புதிய உயரத்தை எட்டியுள்ளது. இதை என்னால் உணர முடிகிறது” என்று கூறினார்.
இதனிடையே, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார் . அப்போது பேசிய அவர், “இன்று நான் கொண்டு வந்திருக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மூலம், மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். இது ஒரு முக்கிய படியாகும்” என்று கூறினார்.
இம்மசோதா ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ என்று அழைக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு சிறப்புக் கூட்டத் தொடர் மாற்றப்பட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, “நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்பது ஒரு வரலாற்றுச் சட்டமாகும். இது பெண்களின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும். மேலும் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. சிறப்புக் கூட்டத் தொடர் நாளை நிறைவடையும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்றோ அல்லது நாளையோ நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.