அஸ்ஸாமில் அமிர்த கலச யாத்திரை தொடங்கியது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் டாக்டர் நுமல் மோமின், இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரதப் பிரதமர் மோடி, நாட்டின் சுதந்திரத்திற்காக உயர்த் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக “என் மண் என் தேசம்” இயக்கம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த இயக்கத்தின் மூலம், அமிர்த கலச யாத்திரை என்கிற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து சிறிய அளவிலான 7,500 பானைகளில் மண் மற்றும் மரக்கன்றுகள், செடிகள் சேகரிக்கப்படும். இவை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, போர் நினைவிடத்தில் கொட்டப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூங்கா அமைக்கப்படும். மேலும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த முன்னெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, அமிர்த கலச யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் கடந்த 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அமிர்த கலச யாத்திரை தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் அமிர்த கலச யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த யாத்திரையை அம்மாநிலத்தின் துணை சபாநாயகர் டாக்டர் நுமல் மோமின், கர்பி ஆங்லாங் மாவட்டத்திலுள்ள போகாஜன் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தில்லாவ்ஜான் கிராமத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, வீடு வீடாகச் சென்று அமிர்த கலசங்களில் மண் மற்றும் செடிகளை சேகரித்தார். இந்த கலச யாத்திரை அக்டோபர் 28-ம் தேதி வரை மாநிலத்தில் நடைபெறும். பின்னர், அக்டோபர் 28-ம் தேதி டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மொத்தம், 270 அமிர்த கலசங்களில் மண் மற்றும் செடிகள் சேகரிப்பட்டு வருகிறது.