தமிழகத்தில், புதரை நீக்குவதும், நச்சுப் பாம்பை விரட்டுவதும் தமிழகம் எனும் வீட்டிற்கு அவசியம் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பதிவில், நச்சுப்பாம்பை நிச்சயம் விரட்ட வேண்டும், உதயநிதி தமிழக அரசியலை புதர் மற்றும் நச்சு பாம்பு உதாரணத்தோடு விளக்கியது அருமை.
ஆனால், விளையாட்டுத் துறையை கவனித்துக் கொண்டிருக்கும் நடிகருக்கு, தமிழகத்தின் உண்மையான வரலாறு தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதனால் அவருக்கு உண்மையான நச்சுப்பாம்பு எது? புதர் எது? என்று விளக்க வேண்டியது, அரசியல் அனுபவம் உள்ளவர்களின் கடமை.
உதயநிதி சொன்னது போல வீடு என்பது நம் தமிழகம் தான். ஒரு நச்சுப் பாம்பை எப்போதும் மக்கள் விரட்டி அடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
ஆனால், அந்த நச்சுப் பாம்பு, ஒருமுறை ராஜாஜி என்ற தேசியவாதியின் பின்னால் அடைக்கலம் தேடிக்கொண்டு வந்தது. பின்னர் எம். ஜி.ஆர் என்ற தேசியவாதியின் பின்னால் அடைக்கலம் தேடியது. பாம்புக்கு இரக்கப்பட்டு பால் வார்த்த ராஜாஜி யின் தவறை எம்.ஜி.யார் செய்யவில்லை. அவர் மறைவு வரை தமிழக மக்கள் அந்த நச்சுப் பாம்பை ஓரம் கட்டியே வைத்து இருந்தார்.
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அந்த நாச்சுப்பாம்பு , ஒரு தேசியவாதியின் பின்னால் ஒளிந்து கொண்டோ, இல்லை பல கூட்டணிகளிடம் ஒட்டிக் கொண்டோ தான் நம் வீட்டிற்குள் நுழைந்து வருகிறது. நச்சு பாம்பு யார் என்று நான் விளக்க தேவை இல்லை. ஆனால், இங்கே ஒரு புதர் மண்டிக் கிடக்கிறது.
ஒவ்வொரு முறையும் அந்த நச்சுப் பாம்பு அந்த புதர் வழியாக தான் வருகிறது. ஆம் , தேசியத்தை நேரடியாக ஆதரிக்காமல் இருக்கும், நம் மக்களின் அறியாமை என்னும் புதர்.
தேசியவாதிகள் வலுவான தலைமையாக இருக்கும் போதெல்லாம் நச்சு பாம்பு, எதிர் வரிசையில் நிற்க கூட வழி இல்லாமல் இருந்தது என்பது தான் தமிழக வரலாறு. உதயநிதிக்கு வரலாறு தெரியவில்லை என்பதை இந்த ஒரு உதாரணத்தை மட்டும் வைத்து சொல்லி விட முடியாது.
திமுகவை ஆரம்பித்ததே சனாதனத்தை எதிர்க்க என்று கூறி இருக்கிறார். சனாதன தர்மம் போதிக்கும் வாழ்க்கை முறைக்கு சற்றும் ஒவ்வாத பெரியாரின் திருமணத்தை எதிர்த்து தான், திமுக ஆரம்பிக்கப்பட்டது என்பது தான் வரலாறு.
பழங்குடியின பெண் என்பதால், ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டடத்திற்கு அழைக்கவில்லை என்பது தான் சனாதனம் என்று உதயநிதி கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது. பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியது தான் சனாதனம்.
அதே பழங்குடியின பெண்ணை, எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி ஆக்கி விடக்கூடாது என்று துடித்து எதிரணியில் நின்று இவர்கள் தூற்றும் ஒரு பிராமணருக்கு வாக்களித்தவர்கள் தான் இந்த போலி சனாதன எதிர்ப்பாளிகள். இவர்களின இந்த மனநிலையை தான் ஒழிக்க வேண்டும்.
எனவே , உதயநிதி கூறியது போல , புதரை நீக்குவதும் , நச்சு பாம்பை விரட்டுவதும் தமிழகம் எனும் வீட்டிற்கு அவசியம். அந்தப் புதர் மக்களின் அறியாமை பாம்பு நீங்கள் தான் ஐயா.
இதை, மக்கள் உணர்ந்து விரைவில் மாற்றங்களை செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.