தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் QR கோட் பதிக்கப்பட்ட கழுத்து செயின் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதர்களின் பிரச்னைகளை எளிதாகக் களைந்துவிடுகிறது. அந்தவகையில், மும்பையில் QR – Code அச்சடிக்கப்பட்ட, கழுத்தில் அணியும் செயின் மக்களிடையே கவனம் பெற்று வருகிறது. இந்த செயின் வயதானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், டிமென்ஷியா போன்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இவர்கள் தங்களது இருப்பிடத்தை மறந்து தொலைந்து போவதற்கான அபாயம் இருக்கிறது.
இதனை தவிர்க்க 24 வயதான டேட்டா இன்ஜினீயர் அக்ஷய் ரிட்லான், QR – Code அச்சடிக்கப்பட்ட கழுத்தில் அணியும் செயினை தயாரித்து இருக்கிறார். இந்தப் புதிய முயற்சியின் பெயர் ‘புராஜெக்ட் சேட்னா’ (Project Chetna). ஒருவேளை யாராவது தொலைந்து போகும்பட்சத்தில் QR -Code – ஐ யாராவது ஸ்கேன் செய்தால், அந்த நபரின் பெயர், தொடர்பு விவரங்கள், முகவரி போன்ற அடிப்படை விவரங்களைக் காட்டும். அவசரகால மொபைல் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியும். இதன்மூலம் குடும்பத்தினரை எளிதாக அணுக முடியும்.
இது போன்ற ஒரு தயாரிப்பு மிகவும் அவசியமானது மற்றும் நமது சமூக த்தில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு இது காலத்தின் தேவையாகும். இது குறித்து அக்ஷய் ரிட்லான், ” அல்ஸைமர் நோய், டிமென்ஷியா, ஸ்கிஸோஃப்ரினியா பாதித்தவர்களும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பல நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேறி, வீடு திரும்ப முடியாமல் போகும் நிலை இருக்கும். இவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்” எனக் கூறியுள்ளார்.