தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் வரும் 25 -ம் தேதி, திங்கட்கிழமை அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதற்குக் காரணங்களை அடுக்கியுள்ள தொழில் அமைப்புகள், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
அந்த வகையில், குடிசை மற்றும் குறு மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு அளிக்க வேண்டும் என்றும், உயர்த்தப்பட்டுள்ள தாழ்வழுத்த மின் கட்டணத்தை 0 முதல் 12 கிலோ வாட் இணைப்புக்கு ரூ.70-லிருந்து ரூ.20 ஆகவும் 0 முதல் 50 கிலோ வாட் வரை ரூ.77-லிருந்து ரூ.35 ஆகவும், 50 முதல் 112 கிலோ வாட் வரை ரூ.153-லிருந்து ரூ.35 ஆகவும், 112 முதல் 150 கிலோ வாட் வரை இணைப்புக்கு ரூ.562-லிருந்து ரூ.350 ஆகவும் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் மின்னழுத்தக் கேட்பு கட்டணம் உயர் மின்னழுத்தப் பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்புக்கட்டணம் தற்பொழுது வசூலிக்கப்படும் ரூ.562 -லிருந்து ரூ.350 ஆகக் குறைக்க வேண்டும் என்றும், தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு பீக் அவர் கட்டணத்தை முற்றிலும் நீக்க வேண்டும், உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கு பீக் அவர் 8 மணி நேரம் என்பது 4 மணி நேரமாகவும், அதற்கான கட்டணம் முன்பு போலவே 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், வருடாவருடம் 1 சதவீதம் மட்டுமே மின் கட்டண உயர்வு இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சோலார் நெட் வொர்க்கிங் கட்டணம் முற்றிலும் நீக்க வேண்டும், இந்த கட்டணமானது சோலாரில் முதலீடு செய்து உபயோகிப்பவர்களுக்கு மிகவும் தடையாக இருப்பதால் சோலார் உபயோகிப்போர் இதில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், நெட்மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 112 முதல் 150 கிலோ வாட் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு பரிசீலித்து, உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைக் குறைத்து, பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளைப் பாதுகாக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழக அரசு மிரண்டுபோய் கிடக்கிறது.