அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் அரியலூர் நகரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவ்வாறு கல்வி பயின்று வரும் மாணவர்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பேருந்துகளில் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அரியலூர் – ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் பேருந்துகள் கல்லூரி செல்வதற்கு குறித்த நேரத்தில் வரவில்லை என்றும், இதனால், கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்லமுடியவில்லை என்றும், தாமதமாகச் செல்வதாகவும், இதனால், பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், கல்லூரிகளில் நிர்வாகத்தின் மேல் நடவடிக்கைக்கு ஆளாவதாகவும், மாலை நேரத்திலும் கூட குறித்த நேரத்தில் பேருந்து வருவதில்லை எனக் குற்றம் சாட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தகவலறிந்து அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மாணவர்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.