ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, அந்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை திசை திருப்பவே தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறது என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78வது கூட்டத்தொடரின்போது, பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காக்கர் பேசும்போது, இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே நாங்கள் விரும்புகிறோம்.
பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம், என அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த ஐ.நா. பொது சபையின் இரண்டாவது குழுவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட், இந்தியாவின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்து வெளியேற வேண்டும். எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கான கட்டமைப்புகளை அந்நாடு உடனடியாக மூட வேண்டும். சட்டவிரோத மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ள இந்திய பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
“உலகின் மிக மோசமான மனித உரிமைகள் பதிவுகளில் ஒன்றாக, குறிப்பாக சிறுபான்மை மற்றும் பெண்களின் உரிமைகள் என்று வரும்போது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன் பாகிஸ்தான் தனது சொந்த வீட்டை ஒழுங்கமைப்பது நல்லது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில், பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா என்ற இடத்தில், சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக 19 தேவாலயங்கள் 19 தேவாலயங்கள் அழிக்கப்பட்டு 89 கிறிஸ்தவ வீடுகள் எரிக்கப்பட்டன.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் குறிப்பாக இந்து சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளனர். பாகிஸ்தானின் சொந்த மனித உரிமைகள் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 1,000 பெண்கள், பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கடத்தல், கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இந்தியாவின் உள்விவகாரங்களை பற்றி அறிக்கைகளை வெளியிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை திசை திருப்பவே தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறது என அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.