ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கனமழை காரணமாக, விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதில் கேரட், பீட்ரூட், கிழங்கு பயிரிட்ட தோட்டங்களில் பல்வேறு ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமாகியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஊட்டியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் இரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற 2 கார்கள் மழைநீரில் சிக்கியது. இதனால், கார்களை மீண்டும் இயக்க முடியாமல் வாகன உரிமையாளர்கள் தவித்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்களின் உதவியுடன் கார் உரிமையாளர்கள் காரை மீட்டனர்.
இதனிடையே, தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே இருந்த குடைகளின் கீழ் நின்றனர். நீண்ட நேரம் மழை பெய்ததால் தங்கும் விடுதிகளுக்குத் தஞ்சம் அடைந்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
















