இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது. மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையை உலமே அங்கீகரித்தது நமக்கு பெருமையான விஷயம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதுவரை 104 உரைகள் நிறைவடைந்த நிலையில் இன்று 105-வது உரை ஒலிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது, கோடிக்கணக்கான மக்கள் வெவ்வேறு ஊடகங்கள் மூலம் ஒரே நேரத்தில் கண்டுகளித்தனர். இஸ்ரோவின் யூடியூப் லைவ் சேனலில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். சந்திரயான்-3 மீது இந்தியர்களின் பற்று எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுகிறது.
மேலும், சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு ஜி20 மாநாடு ஒவ்வொரு இந்தியரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கி இருக்கிறது. பாரத மண்டபம் ஒரு பிரபலம் போல் மாறிவிட்டது. அம்மண்டபத்தின் முன்பு ஏராளான மக்கள் செல்பி எடுத்து பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனையும் நிரந்தர உறுப்பினராக்கியதன் மூலம் இந்தியா தனது தலைமையை நிரூபித்திருக்கிறது. மேலும், ஜி20 உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடமானது பல நூறு ஆண்டுகளுக்கு உலக வர்த்தகம் நடைபெறுவதற்கான அடிப்படையாக உருமாறும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாந்தி நிகேதன் மற்றும் கர்நாடகாவின் புனித ஒய்சாலா கோவில்கள் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான சாதனைக்காக அனைத்து நாட்டு மக்களையும் நான் வாழ்த்துகிறேன். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் 13-ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடக்கலைக்கு பெயர் பெற்றவை. இக்கோவில்கள் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, கோவில் கட்டுமானத்தின் இந்திய பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதையாகும்.
நமது வரலாற்று மற்றும் கலாச்சார இடங்கள் முடிந்தவரை உலக பாரம்பரியத் தளங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் முயற்சி. நீங்கள் எங்காவது பயணம் செய்யத் திட்டமிடும் போதெல்லாம், இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காண முயற்சிக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக தனித்துவமான நூலகத்தை இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்ப காலகட்டத்திலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளை வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பண்டிகை காலம் துவங்க உள்ள நேரத்தில் உள்ளூர் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.