நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் இரயில் சேவை உட்பட 9 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரயில்கள் பயண தூரத்தை அதிவேகத்தில் கடப்பதால், இதற்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் சென்னை-கோவை இடையே முதல் வந்தே பாரத் இரயிலை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தற்போது சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் இரயில் இயக்க இரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்காக பிட்லைன், தண்டவாளங்கள் பலப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இதையடுத்து, கடந்த 21-ம் தேதி இந்த இரயில் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. அதேபோல, மறுமார்க்கமாக சென்னையில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கியது. இது இரவு நெல்லைக்கு வந்தடைந்தது.
இதைத் தொடர்ந்து, நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கத்தின் தொடக்க விழா இன்று நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த இரயிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவையொட்டி, நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
எனினும், முதல் நாளான இன்று பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை வரையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி வரையும் பயணம் செய்தனர். இந்த இரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சில நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்த இரயிலின் வழக்கமான சேவையானது நாளை சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் பராமரிப்புப் பணிக்காக நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, நெல்லையில் இருந்து வரும் 27-ம் தேதி காலை 6 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.
இந்த இரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்றே தொடங்கி விட்டது. இந்த இரயிலில் சாதாரண ஏ.சி. பெட்டிகளில் உணவுடன் சேர்த்து பயணிக்க 1,620 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எக்ஸிகியூட்டிவ் ஏ.சி. பெட்டிகளில் 3,005 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து சென்னை செல்லும் இரயில் பயணிகளுக்கு காலையில் டீ, காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் இரயிலில் டீ, ஸ்நாக்ஸ், இரவு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உணவு தேவை இல்லை என்றால், டிக்கெட் எடுக்கும்போதே தவிர்க்கவும் வழிவகைகள் செய்யப்பட்டிருக்கிறது.
முன்னதாக, நெல்லை மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சியை நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் வைத்து கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த இரயிலுடன் விஜயவாடா-சென்னை சென்ட்ரல், பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-ஐதராபாத் (கச்சிகுடா), காசர்கோடு-திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா), பூரி-ரூர்கேலா, உதய்பூர்-ஜெய்ப்பூர், பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் (சபர்மதி) ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.